முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஏழை எளிய மக்கள் மருத்துவ சிகிச்சையை இலவசமாகப் பெறும் வகையில் முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ரூ.2 லட்சமாக இருந்த தொகையை தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளனர். இதற்கான உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:
''தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில், ஜெயலலிதாவால் கடந்த 2012-ம் ஆண்டு நவ.11 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்கு காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 26.96 லட்சம் நபர்கள் 5,133.33 கோடி ரூபாய் அளவிற்கு பயனடைந்துள்ளனர்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள், பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை, மேலும் உயர்த்தி வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.
அக்கோரிக்கையினை பரிசீலனை செய்து, 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
அதன்படி, நாளையிலிருந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.58 கோடி குடும்பங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டொன்றிக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்''.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.