தமிழகத்தில் அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற வலியுறுத்தி ஆக.30-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சுங்கச்சாவடிகள் என்ற பெயரில் பொதுமக்களிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபட தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதிதாக வாகனங்கள் வாங்கும்போது சாலை வரி வசூலிக்கப்படுவதால், சுங்கச்சாவடிகளை அமைத்து வசூல் செய்வது சரியல்ல. சுங்கச்சாவடிகளில் 10 முதல் 40 சதவீதம்வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது மக்களை சுரண்டும் செயல்.
சுங்கச்சாவடிகளை உடனேஅகற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கசாவடிகளையும் முற்றுகையிடும் போராட்டம் ஆக. 30-ம் தேதி நடத்த உள்ளோம்
சென்னையில் உண்ணாவிரதம்
என்எல்சி. நிறுவனத்தில் பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இப்பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா தலையிட வலியுறுத்தியும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொழிலாளர் பாசறை சார்பில் செப்.1-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும்.
காலாவதியான பொருட்களால் என்.எல்.சி. 2-வது அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுள்ளது. இதனால் 2011-ம் ஆண்டில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 500 மெகாவாட் மின் உற்பத்தி இதுவரை கிடைக்கவில்லை. இதில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகளைக் கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.