தமிழகம்

பி.எட். சேர்க்கையில் விதி மீறல்: மாணவர்கள் புகார்

கே.சுரேஷ்

நிகழாண்டு பி.எட். மாணவர் சேர்க்கையில் அரசின் விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 16 உதவிபெறும் கல்லூரிகளும் உள்ளன. இதைத் தவிர சுமார் 600 தனியார் கல்லூரிகள் உள்ளன.

இதில் கோவையில் பெண்களுக்கும், சென்னையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கெனவும் கல்லூரி தனித்தனியாக உள்ளது. இதைத் தவிர குமாரபாளையம், காட்பாடி, புதுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் இருபாலருக்கான அரசு கல்வியியல் கல்லூரிகள் உள்ளன.

இருபாலருக்கான கல்லூரிகளில் புதுக்கோட்டையில் 30 விழுக்காடும் மற்ற கல்லூரிகளில் 50: 50 என்ற அடிப்படையிலேயே மாணவ, மாணவியர் சேர்க்கை இருந்து வந்துள்ளது. அதன்படி ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையும் பின்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்பட்டு வந்த இந்த கலந்தாய்வு நிகழாண்டில் இருந்து கல்வியியல் கல்லூரி இயக்ககத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

முதல்கட்ட கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். இதில் ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்கள், மாணவியர் இடஒதுக்கீட்டு முறையில் எத்தனை பேரை நிரப்ப வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படாமல், மாணவியரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதில் தற்போது புதுக்கோட்டையில் 118 இடங்களில் 90 மாணவியரும், ஒரத்தநாட்டில் 142-க்கு 97 மாணவியரும், குமாரபாளையத்தில் 105-க்கு 83 பேரும், காட்பாடியில் 117-க்கு 80 மாணவியரும் சேர்ந்துள்ளனர்.

“இதில் எந்தக் கல்லூரியிலும் இருபாலருக்கான இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. அதாவது 50 சதவீதம் மட்டுமே மாணவியரை சேர்க்காமல் உள்நோக்கத்தோடு 80 சதவீதத்துக்கும் அதிகமாக மாணவியரைச் சேர்த்துள்ளனர். மேலும், ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படவில்லை. எனவே, மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த நாங்கள் லட்ச ரூபாய் செலுத்தி சுயநிதி கல்லூரிகளில் சேர்ந்து படிக்க இயலாத நிலையில் உள்ளோம். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தற்போதைய முதல்கட்ட கலந்தாய்வை ரத்து செய்து, அரசின் விதிகளைப் பின்பற்றி மீண்டும் கலந்தாய்வு நடத்த கல்வியியல் கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என, பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து மாணவர் கண்ணன் கூறியதாவது: “புதுக்கோட்டை கல்லூரியில் 118 இடங்களில் 30 விழுக்காடு மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கு 90 பேரை மாணவியராக சேர்த்துள்ளனர். இதனால் என்னைப் போன்ற மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்குமாறு முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன்” என்றார்.

SCROLL FOR NEXT