ஸ்டெர்லைட் விவகாரத்தில் எத்தனை சதிகள் நடந்தாலும், எங்கள் மக்களைப் பிரிக்க முடியாது. கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரையில் நாங்கள் போராடுவோம் என்று தூத்துக்குடி மக்கள் கூறியுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்கு அறிக்கைக்கு எதிராக இன்று (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் மதுரையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது, கூட்டமைப்பைச் சேர்ந்த வசந்தி, ஜெனரோஸ் ஆகியோர் கூறியதாவது:-
“போராட்டத்தை எதிர்கொள்ளத் துப்பில்லாத அரசு நிர்வாகம் போராடும் மக்களிடம் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்கிறது. கடந்த 3 மாதமாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காண்ட்ராக்டர்கள் மூலமாக சாதி, மத உணர்வுகள் தூண்டப்படுகின்றன. இதற்காக கோடிக்கணக்கில் பணத்தையும் செலவிடுகிறார்கள். போராட்டத்தில் முன்னின்றவர்களைப் பற்றி அவதூறும் பரப்புகிறார்கள்.
‘இறைப்பணியில் ஸ்டெர்லைட் காப்பர்’ என்ற பெயரில் லட்சக்கணக்கான கந்த சஷ்டி கவசப் புத்தகங்களை அச்சிட்டு திருச்சந்தூரில் நடந்த கந்த சஷ்டி விழாவின் போது வழங்கினார்கள். அந்தப் பிரசுரத்தின் கடைசி இரு பக்கங்களில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை ஆகோ ஓகோவென்று புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது.
நாங்கள் துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்தால், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்து உள்ளே தள்ளுகிற அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்கு மட்டும் ஏன் அனுமதி தருகிறது? அதுவும் இறைவழிபாட்டுத் தலத்தில் அதனை வழங்க அனுமதித்தன் உள்நோக்கம் என்ன? எத்தனை சதிகள் நடந்தாலும், எங்கள் மக்களைப் பிரிக்க முடியாது. கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரையில் போராடுவோம்” என்று அவர்கள் கூறினர்.