தமிழகம்

ஜெயலலிதாவின் புதிய சிலை: ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாகத் திறப்பு

செய்திப்பிரிவு

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை புதிய பொலிவுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

ஜெயலலிதா மறைந்த பின் அவருக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் சிலை வைக்க அதிமுகவினர் முடிவு செய்தனர். அவரது பிறந்த நாளான கடந்த பிப்ரவரி 24 அன்று ஜெயலலிதாவின் 7 அடி உயர முழு உருவச்சிலையை ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து திறந்து வைத்தனர். சிலை திறந்தவுடன் சிலையைப் பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.

அந்த சிலையில் ஜெயலலிதாவின் கம்பீரம், அவரது உருவம் எதுவும் இல்லை என விமர்சனம் வைக்கப்பட்டது. கடுமையான விமர்சனங்கள் வந்ததை அடுத்து அமைச்சர்கள் வேறு சிலையை விரைவில் அமைப்போம் என்று தெரிவித்தனர்.

இதற்கான சிலை தயாரிக்கும் பணி ஆந்திராவிலிருக்கும் ரமேஷ் என்கிற சிற்பி தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தச் சிலை ஜெயலலிதா போன்று தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதனால் கடந்த 8 மாதங்களாக சிலை செய்யும் பணி தீவிரமாகவும் கவனமாகவும் நடந்தது.

இந்நிலையில் சிலை முழுமையாக தத்ரூபமாகத் தயாரானது. முன்பிருந்த சிலை அகற்றப்பட்டு அங்கு புது சிலை வைக்கப்பட்டது.

இந்நிலையில்ஜெயலலிதாவின் புதுப்பொலிவான சிலை இன்று திறக்கப்பட்டது. காலை 9 மணிக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சிலையைத் திறந்து வைத்தனர். ஜெயலலிதாவின் உருவம் சிரித்த முகத்துடன் வலது கையை உயர்த்தி இரட்டை விரலைக் காட்டும் வகையில் தத்ரூபமாக சிலை அமைந்துள்ளது.

சிலையைத் திறந்த பின் கீழே அமைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அமைச்சர்கள், நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT