அழிந்துவரும் அரிய தாவரங் களைப் பாதுகாக்க மத்திய பல்கலைக்கழக மானியக் குழு, மத்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் மூலம் ரூ.38 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. அரிய வகை தாவரங்களின் ஓர் இலையில் இருந்து ஓராயிரம் தாவரங்களை உருவாக்கும் திசு வளர்ப்பு முறையை, பெரியார் பல்கலைக்கழகமும் ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைக்கழகமும் கூட்டு முயற்சியில் ஆராய்ச்சி செய்து வருகின்றன.
உலகில் பல்லுயிர் பெருக்கத்துக்கு அனைத்து நாடுகளும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அழிந்துவரும் காடுகளையும், அதில் வாழும் விலங்கினங்களையும், அரிய வகை தாவரங்களையும் பாது காத்து பேணி வளர்க்க, புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
உலகில் பல கோடி வகையான பூக்கும், பூவா தாவரங்கள் உள்ளன. இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பூக்கும் தாவரங்கள் உள்ளன. இதில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்கள் அழிந்துவரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
இவ்வாறு அழிந்துவரும் அரிய தாவரங்களை பாதுகாத்து பேணி வளர்க்க, மத்திய பல்கலைக்கழக மானியக் குழுவும், மத்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல்கலைக்கழகங்களில் உள்ள தாவரவியல் துறை மூலம் அழிந்துவரும் அரிய தாவரங்களை திசு வளர்ப்பு முறையில், புதியதாக உருவாக்கிடும் முயற்சியில் பேராசிரியர்களுடன் இணைந்து மாணவ, மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
புத்துயிர்
இந்தியாவில் அழிந்துவரும் அரிய தாவரங்களைப் பாதுகாத் திடும் வகையில் டெல்லி, திருவனந் தபுரம் ஆகிய இடங்களில் நேஷனல் ஜெம் பிளாசம் சென்டர் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள அரிய வகை தாவரங்கள் 180 டிகிரி குளிர்நிலையில், ஆராய்ச்சிக் கூட்டத்தில் சேமித்து வைக்கப் பட்டுள்ளன. புயல், மழை, சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடரால் தாவர இனம் அழிந்தாலும், ஆராய்ச்சிக் கூடத்தில் டிஎம்எஸ்ஓ ரசாயனத்தில் பதப்படுத்தப்பட்டு, பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு தாவர இனம் அழிந்தாலும், நானோ துகள் மூலம் அந்த தாவரத்தின் திசுக்களை கொண்டு, புத்துயிர் அளித்து, மீண்டும் அதை நிலப்பகுதியில் பயிரிட்டு சாகுபடி செய்ய முடியும். இதில் மனித உயிரைக் காக்கக்கூடிய மூலிகை தன்மையும், மருத்துவ குணமும் கொண்ட தாவரங்களுக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து, திசு வளர்ப்பு முறையிலான ஆராய்ச்சி நடந்து வருகிறது.
இந்தியாவில் இனிப்பு துளசி, சிறு குறிஞ்சான், செங்காந்தள் மலர், சிற்றரத்தை, காஸ்டஸ் உள்ளிட்ட பல வகையான அரிய மலர்கள், வனத்துறையின் சிகப்பு பட்டியலில் அழிந்துவரும் தாவரங்களாக கணக்கெடுக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற அரிய வகை தாவரங்கள், மனிதர்களை சிறிது சிறிதாக கொல்லும் புற்றுநோய், நீரழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை தீர்க்கக்கூடிய மருத்துவ குணம் கொண்டவை.
சேலம், பெரியார் பல்கலைக் கழகத்தில் தாவரவியல் ஆராய்ச்சித்துறை பேராசிரியர் விஜயகுமார் தலைமையில் மாணவ, மாணவிகள் நானோ துகள்களைக் கொண்டு திசு வளர்ப்பு முறையில் தாவரங்களை பயிரிட்டு சாதனை படைத்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சிக்காக மத்திய பல்கலைக்கழக மானியக் குழுவும், மத்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகமும் 38 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளன. இந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில், கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஓர் இலையில் இருந்து ஓராயிரம் தாவரங்களை திசு வளர்ப்பு முறையில் உருவாக் கக்கூடிய ஆராய்ச்சி வெற்றி அடைந்துள்ளது. எனவே, வரும் காலத்தில் அழிந்துவரும் தாவரங்கள் என்பதை, இல்லாமல் ஆக்கிவிடக்கூடிய நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கியக் காரணிகள்
இது குறித்து பெரியார் பல்கலைக்கழக தாவரவியல் துறைத் தலைவர் பேராசிரியர் விஜயகுமார் கூறியதாவது:
மனித இனமட்டுமல்லாமல் விலங்கினங்களும் உயிரியல் சுழற்சி கோட்பாட்டுக்குள் இருப் பதற்கான முக்கிய காரணியாக தாவரங்கள் விளங்கி வருகின்றன. உணவுத் தேவையுடன், உயிர் காக்கும் மூலிகை மருந்தாகவும் தாவரங்கள் இருந்து வருகின்றன. தாவரங்களின் மூலக்கூறுகளில் பலவிதமான குணாதிசய ரகசியங்கள் உள்ளடங்கியுள்ளன.
சித்தர்கள் மூலிகைச் செடி களைக் கொண்டு நீண்ட ஆயுள் வாழ்ந்ததற்கான ஆதார நூல்கள் பல உள்ளன.
முக்கியத்துவம் வாய்ந்த அரிய மூலிகைச் செடிகளையும், அழிந்துவரும் தாவரங்களைப் பாதுகாத்து பேணி வளர்த்திடும் வகையில், திசு வளர்ப்பு ஆராய்ச்சி மூலம் தாவரங்களுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, சோதனைக் கூடங்களில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
வேர், தண்டு எதுவும் இல்லாமல் ஒரு தாவரத்தின் இலை மட்டும் இருந்தால், அதில் இருந்து திசுக்களை எடுத்து, புதிய தாவரங்களை உருவாக்க முடியும்.
ஓர் இலையை கொண்டு ஓராயிரத்துக்கும் அதிகமான புதிய தாவரங்களை உருவாக்க முடியும். எனவே, அழிந்து வரும் அரிய தாவரங்களுக்கான பாதுகாப்பு வளையமாக, இந்த ஆராய்ச்சி திகழ்ந்து வருகிறது. இதற்காக மத்திய அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.