அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த இறுதி அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவியை, அதே கல்லூரி மாணவிகள் சிலருக்கு பாலியல் அழைப்பு விடுத்த வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை காமராஜர் கல்லூரி உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பலருக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கக்கப்பட்டு வரும் நிலையில், அவர் யாருக்காக மாணவிகளிடம் அவ்வாறு பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை.
உயரதிகாரிகள் எனும் ஒற்றை வார்த்தையில் சுருக்கிவிடும் காவல்துறை அவர்கள் யார் என விசாரிக்கவில்லை. பல்கலைக்கழக பதிவாளர், வேந்தர், துணைவேந்தர், உயர்கல்வித்துறை செயலர், உயர்கல்வித்துறை அமைச்சர் என அனைவரும் உயரதிகாரிகள் என்ற பட்டியலுக்குள் வரும் நிலையில், அந்த உயரதிகாரி யார் என கூறவோ, அவர்களிடம் விசாரிக்கவோ இல்லை.
சிபிசிஐடி காவல்துறையினர் நியாயமாக விசாரிக்காமல் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே நிர்மலா தேவி வழக்கை சிபிசிஐடி வசமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும். அதுவரை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிர்மலா தேவி வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணையில் உயர் அதிகாரிகள் குறித்து எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை. நியாயமான முறையில் விசாரணை நடைபெறவில்லை எனத் தெரிவித்தார்.
அதற்கு அரசுத் தரப்பில், முறையாக விசாரணை நடைபெற்று, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையை டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.