தமிழக அரசுக்கு எதிராக சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்புவதாக, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை எழிலகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
"அடுத்து வரும் இரு தினங்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மக்களின் முழு ஒத்துழைப்பு வேண்டும்.
தமிழக அரசுக்கு எதிராகச் சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்புகின்றனர். சாலை மறியல், வழி மறித்தல் போன்றவற்றில் ஈடுபட்டால் தான் பேரிடராக அந்தந்த கிராமங்களை அறிவிப்பார்கள் என மக்களை சிலர் தூண்டுகின்றனர். மக்களை சிலர் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு மக்கள் முக்கியத்துவம் தர வேண்டாம். பொதுமக்களின் உணர்வுகளை உணர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை 4 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தார்.
சமூக ஆர்வலர் என்ற பெயரில் முகநூல், ட்விட்டர் மூலம் எந்தெந்த இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை அறியாமல் வீட்டில் அமர்ந்து விமர்சனம் வைப்பதை எந்த நடுநிலையாளர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் அரசுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. மற்றவர்களின் கடமை உணர்வை கொச்சைப்படுத்தாமல் இருங்கள். சில இடங்கள் போர்க்களம் போன்று உள்ளது.
தண்ணீர், மின்வசதி, உணவு உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பொதுமக்கள் என்ற போர்வையில் சிலர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களை பொதுமக்கள் அப்புறப்படுத்த வேண்டும். இரவு முழுவதும் நிவாரணப் பணிகளில் விழித்திருந்து அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் பாராட்டுக்குரியவர்கள், அவர்களின் பணி மகத்தானது. மீட்புப் பணியில் ஈடுபடுகிற இளைஞர்களை, பெண்களைப் பாராட்ட வேண்டும்.
இது பேரிடர், இதில் அரசியல் இல்லை. தமிழர்கள் என்ற அடிப்படையில் நம் உறவுகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் களத்திற்குச் செல்ல வேண்டும். மின்சாரம் இல்லாததால் ரேடியோ, வருவாய் அலுவலர்கள் மூலம் வானிலை குறித்த தகவல்களை அறியலாம். மக்கள் அச்சப்பட வேண்டாம்''.
இவ்வாறு அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
இதையடுத்து, அதிகாரிகள் கிராமங்களுக்குச் சென்று பார்வையிடவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் உதயகுமார், "அதிகாரிகள் பெரும்பாலான இடங்களுக்குச் சென்றுள்ளனர். சுட்டிக்காட்டப்படும் மற்ற இடங்களுக்கும் செல்வார்கள்" எனத் தெரிவித்தார்.
மேலும், முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் உதயகுமார், "முதல்வர்தான் உத்தரவிடுகிறார், கணக்கெடுப்பு பணிகள் நடைபெற வேண்டும். முதல்வர் எங்கே இருந்தாலும் பணிகள் நடைபெறுகின்றன" எனத் தெரிவித்தார்.