தமிழகம்

SIR | ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1.45 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சியினர் முன்னிலையில் இன்று ஆட்சியர் சந்திரகலா வெளியிட்டார். எஸ்ஐஆர் பணியின் மூலமாக இந்த மாவட்டத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 157 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை தாங்கி, அனைத்து கட்சியினர் முன்னிலையில் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, எஸ்.ஐ.ஆர் தீவிர திருத்த பணிகள் முன்பு ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் - 5,12,856, பெண் வாக்காளர்கள் - 5,44,734, மூன்றாம் பாலினத்தவர்கள் - 110 என மொத்தம் 10,57,700 வாக்காளர்கள் உள்ளனர்.

எஸ்.ஐ.ஆர் திருத்தம் பணிகளுக்கு பிறகு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அரக்கோணம் (தனி) ஆண்கள்- 93,588 பெண்கள் - 98,188, மூன்றாம் பாலினத்தவர்கள் - 24 என மொத்தம் 1,91,800 வாக்காளர்களும், சோளிங்கர் ஆண்கள் - 1,22,796 பெண்கள் -1,26,158, மூன்றாம் பாலினத்தவர்கள் - 13 என மொத்தம் -2,48,967 வாக்காளர்களும், ராணிப்பேட்டை ஆண்கள் - 1,14,480, பெண்கள் - 1,21,443, மூன்றாம் பாலினத்தவர்கள்- 37 என மொத்தம்- 2,35,960 வாக்காளர்களும், ஆற்காடு ஆண்கள் -1,15, 605, பெண்கள் -1,20,184, மூன்றாம் பாலினத்தவர்கள் - 27 என மொத்தம்-2,35,816 வாக்காளர்கள் உள்ளனர். அதன்படி, 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஆண்கள் - 4,46,469, பெண்கள் - 4,65,973, மூன்றாம் பாலினத்தவர்கள் - 101 என மொத்தம் 9,12,543 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் உயிரிழப்பு, நிரத்தர குடிப்பெயர்வு, இருமுறை பதிவு கண்டறிய இயலாதவர்கள், மற்றவை என 4 தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் என அரக்கோணம்(தனி) - 42,522, சோளிங்கர் -36,161, ராணிப்பேட்டை - 36,981, ஆற்காடு- 29,493 என மொத்தம் 1,45,157 வாக்காளர்களை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலானது மாவட்டத்தில் உள்ள 1,247 வாக்குச்சாவடிகளில் அமைந்துள்ள 629 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்படும். ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் இன்று முதல் 2026 ஜனவரி 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் கீழ் இன்று முதல் ஜன.18-ம் தேதி வரை பெயர் சேர்த்தல் படிவம்-6, பெயர் நீக்கம் செய்தல் படிவம் -7, வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை திருத்தம் செய்தல் படிவம்-8 ஆகிய படிவங்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள படிவம் 6-ஏ அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் 2026-ம் ஆண்டு பிப். 17-ம் தேதி வெளியிடப்படும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்தார். இதில், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் என பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT