தமிழகம்

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுகிறது; தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெறுவதால் கடலோர மாவட்டங்களில் மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:

''நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு திசையில் நகர்ந்து நாளை தமிழகம் மற்றும் புதுவையின் கடலோரப் பகுதிகளில் நிலை கொள்ளக்கூடும்.

இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்று மாலை முதல் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கும். படிப்படியாக வரும் 20, 21 தேதிகளில் படிப்படியாக உள் மாவட்டங்களில் மழைப் பெய்யத் தொடங்கும்.

அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழையைப் பொறுத்தவரையில் கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்கள் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகம் கடற்கரை மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிகபட்சமாக குன்னூரில் 7 செ.மீ. மேட்டுப்பாளையத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

அக்டோபர் 1 முதல் இன்றுவரை உள்ள காலகட்டத்தில் தமிழகத்தில் பதிவான அளவு 24 செ.மீ. இந்தக் காலகட்டத்தில் எதிர்பார்க்கும் அளவு 30 செ.மீ. இது இயல்பைவிட 20 செ.மீ. குறைவு. டிசம்பர் மாதம் வரை மழை இருக்கிறது.

சென்னையைப் பொறுத்தவரை மழை பதிவான அளவு 20 செ.மீ. இந்தக் காலகட்டத்தின் இயல்பு அளவு 53 செ.மீ. இது இயல்பைவிட 60 செ.மீ. குறைவு. உள்பகுதியில் செல்லும்போது இந்தமுறை மழையை எதிர்பார்க்கலாம்.

சென்னையைப் பொறுத்தவரை ஓரிரு இடங்களில் லேசான மழைப்பெய்யக்கூடும். 20, 21 தேதிகளில் இடைவெளி விட்டு சில நேரம் மிதமான மழை பெய்யக்கூடும்''.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.   

SCROLL FOR NEXT