தமிழகம்

ராஜஸ்தானிலிருந்து வந்த 2190 கிலோ இறைச்சி சுகாதாரமற்றமுறையில் இருந்ததால் அழிக்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

செய்திப்பிரிவு

ராஜஸ்தானிலிருந்து எழும்பூருக்கு வந்த 2190 கிலோ இறைச்சி சுகாதாரமற்றமுறையில் இருந்ததால் அழித்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது..

கடந்த 17-ம் தேதி ஜோத்பூரிலிருந்து சென்னை எழும்பூர் வந்த ரயிலில் 2,190 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அது நாய் கறியா அல்லது ஆட்டிறைச்சியா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

இறைச்சியின் மாதிரி கால்நடை மருத்துவமனைக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இறைச்சி 4 நாட்களாக உரிய முறையில் எடுத்துவரப்படாததால் அது பினாயில் ஊற்றி கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் புதைக்கப்பட்டது. பின்னர் நேற்று ஆய்வு முடிவு வெளியானதில் அது ஆட்டிறைச்சிதான் என்பது உறுதியானது.

இந்நிலையில் இந்த இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட கோரி இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில்,  இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை உணவுத் துறை அதிகாரிகள் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், 

ரயில்வே காவல்துறை பதிவு செய்த வழக்கில்  விலங்குகள் கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டப்பிரிவுகள் சேர்க்கப்படவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும்,   வெளிமாநிலங்களில் இருந்து இறைச்சியை கொண்டு வருவதற்கான விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும், எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள் ஆய்வுக்கு கால்நடை மருத்துவ பல்கலை கழகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அது ஆட்டு இறைச்சி என்று தெரியவந்ததாகவும் இருந்தபோதிலும் அது சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் அதை மாநகராட்சி அழித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் எந்த விதியின் கீழ் இறைச்சி அழிக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கில்  சென்னை மாநகராட்சியையும் பிரதிவாதியாக சேர்த்த சத்தியநாராயணன் அமர்வு  வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

SCROLL FOR NEXT