தென் மாவட்டங்களில் பரவலாக மழையும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
தமிழக நிலப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி இன்று அதிகாலை 4:00 மணி நிலவரப்படி, தென் மாவட்டங்களை நோக்கி நகர்கிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை குறையத் தொடங்கும். இன்று மாலை டெல்டா மாவட்டங்களில் முற்றிலுமாக மழை விலகி விடும்.
இதனால் டெல்டா மாவட்டங்களில் ‘கஜா’ புயலால் ஏற்பட்ட நிவாரணப் பணிகள் பாதிப்பு, மீட்பு பணிகள் இனிமேல் தொய்வின்றி நடைபெறும். மேலும் 4 நாட்களுக்கு அங்கு மழை இருக்காது என்பதால் மக்கள் புயல் பாதிப்பு பணிகள் அங்கு தடையின்றி நடைபெறும்.
மேலடுக்கு சுழற்சி தெற்கு நோக்கி நகர்வதால் இன்று மாலைக்கு மேல் திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டையின் தென்பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். எனினும் மிக கனமழை பெய்து சேதம் ஏற்படும் அளவுக்கு மழை இருக்காது. எனவே அச்சம் வேண்டாம்.
எனினும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும். அதன் பிறகு நாளை முதல் மழை விலகத் தொடங்கும். பின்னர் 29-ம் தேதிக்கு பிறகே மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.