அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நுங்கம்பாக்கத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், "தென் தமிழகத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் 24 மணிநேரத்தைப் பொறுத்தவரையில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமாக மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால், புதுச்சேரி ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான மழையின் அளவு 31 செ.மீ., இந்த காலக்கட்டத்தின் இயல்பு அளவு 35 செ.மீ., இது 12% குறைவு" என பாலச்சந்திரன் தெரிவித்தார்.