தமிழகம்

கஜா புயல்: தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன? - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஒரு தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் இரண்டு மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள்  அனுப்பப்பட்டுள்ளன என, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "'கஜா புயலானது, மேற்கு மத்திய, கிழக்கு மத்திய மற்றும் தென் வங்கக்கடலில் உருவாகி, கடந்த 6  மணி நேரத்தில் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, சென்னைக்கு கிழக்கு திசையில் 370 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு கிழக்கு – வடகிழக்கு திசையில் 370 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 

இப்புயலானது அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரம் அடைந்து தீவிரப் புயலாக மாறும். மேலும், மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக தீவிரம் குறைந்து தமிழக கடற்கரைப் பகுதிகளான பாம்பன் மற்றும் கடலூர் இடையே நாகப்பட்டினத்தின் அருகில்  இன்று மாலை அல்லது இரவு புயலாகக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே இன்று தீவிர கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றின் திசையானது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் வடதமிழக கடலோரப் பகுதிகளில் இன்று காலை முதல் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயலானது கரையைக் கடக்கும் பொழுது, கடல் கொந்தளிப்பினால், கடல்மட்டமானது ஒரு மீட்டர் உயரத்திற்கு எழும் என்றும், அதனால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், கடலோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள குடிசை வீடுகள், தகர கொட்டகைகள், மின்  மற்றும் தொலைத்தொடர்பு கம்பிகள் சேதமடைய வாய்ப்புள்ளதாகவும், மரங்கள் கீழே விழவும், நெல், வாழை, பப்பாளி மரங்கள் சேதமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர பிரதேச கடலோரப்பகுதிகளில் மீன்பிடி செயல்களில் யாரும் ஈடுபடவேண்டாம் எனவும், மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளிலும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் எனவும், கடலோர பகுதிகளில் குடிசைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்:

கடலோர மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களான மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கஜா புயல் இன்று மாலை  அல்லது இரவு நாகப்பட்டினத்தின் அருகில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கடலூர் மாவட்டத்திலிருந்து ஒரு தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் இரண்டு மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன" என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.        

SCROLL FOR NEXT