'கஜா' புயல் தீவிர புயலாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நுங்கம்பாக்கத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், "வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் 'கஜா' புயல் இன்று காலை இந்திய நேரப்படி 9.30 மணியளவில் சென்னையிருந்து தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது நாகப்பட்டினத்திலிருந்து வடகிழக்கில் சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ளது. இது தீவிர புயலாக மாற வாய்ப்பும் உள்ளது.
புயல் தற்போது 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டுள்ளது. புயல் மேலும் கீழும் நகர்வதால் அதன் வேகத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கக்கூடும். இன்று இரவு சுமார் 11.30 மணியளவில் பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையில் நாகை அருகே புயல் கரையைக் கடக்கக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 80-90 கி.மீ. வேகத்திலும் அவ்வப்போது 100 கி.மீ. வரையிலும் இருக்கக்கூடும்.
அநேக இடங்களில் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்" என புவியரசன் தெரிவித்தார்.