தமிழகம்

மின் புனரமைப்பு பணியில் விபத்து; தொழிலாளியை தூக்கிக்கொண்டு ஓடிய அமைச்சர்: வைரலாகும் புகைப்படம்

செய்திப்பிரிவு

மின் புனரமைப்புப் பணியின்போது தொழிலாளி விபத்தில் சிக்க அவரை தூக்கிக்கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் ஓடும் காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கஜா’ புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்தது. பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்தன.

இந்தப் புயலால் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். 347 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 39,938 மின் கம்பங்கள் விழுந்துள்ளன.

3,559 கி.மீ. நீளமுள்ள மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. மின்சாரம் தடைப்பட்ட மாவட்டங்கள் இன்னும் இருளில் மூழ்கி கிடக்கின்றன. இந்நிலையில் மின்சாரக்கம்பங்களை நடவும் மின் இணைப்பை சீரமைக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்கம்பங்களை சீரமைக்கும்பணி இன்று நடைப்பெற்றது. இதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் திடீர் என காயமடைந்தார். காலில் பலத்த காயமடைந்த அவர் மின்கம்பத்திலிருந்து தொங்கினார்.

உடன் வேலை செய்த தொழிலாளிகள் இதைப்பார்த்து அலறினர். அப்போது அங்கிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் இதைப்பார்த்தார். அவர் உடனே ஓடோடிச் சென்று மற்றவர்களுடன் சேர்ந்து அந்த தொழிலாளியை இறக்க முயற்சி செய்தார்.

மேலிருந்து இறக்கப்பட்ட தொழிலாளியை தூக்கி பிடித்தப்படி சக தொழிலாளிகளுடன் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தார். அவர் தொழிலாளியை காப்பாற்றி ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பிய படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT