தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் ஆயுள் தண்டணை பெற்று சிறையில் உள்ள அதிமுகவினர் மூவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. ஆளுநர் ஒப்புதல் அளித்ததின் பேரில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் இன்று விடுதலையாகின்றனர்.
கடந்த 2000-ம் ஆண்டு தமிழக முன்னாள் ஜெயலலிதா மீதான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த, அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். தீர்ப்பு வந்த அன்று கோவை வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் கல்லூரிப் பேருந்தில் தருமபுரிக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்தப் பேருந்தை நிறுத்திய அதிமுக தொண்டர்கள், பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தினர். இதில் பேருந்துக்குள் சிக்கிக்கொண்ட கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகளான கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தியாவையே உலுக்கிய இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான அதிமுகவைச் சேர்ந்த முனியப்பன், மாது (எ) ரவீந்திரன், நெடுஞ்செழியன் ஆகிய 3 பேருக்கும் சேலம் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது
மேல் முறையீட்டில் குற்றவாளிகள் தரப்பு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து கடந்த 2010-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மூவரும் தங்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மேல் முறையீடு செய்தனர்.
மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
இந்நிலையில், குற்றவாளிகள் தரப்பில், தீர்ப்பில் திருத்தம் செய்யக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஏ.கே.சிக்ரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 2016-ம் ஆண்டு விசாரணைக்கு வந்தது.
வழக்கில் தொடர் வாதங்கள் எடுத்துவைக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகள் முனியப்பன், ரவீந்திரன் நெடுஞ்செழியன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி நீண்டகாலம் சிறையிலிருக்கும் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதில் தர்மபுரி பேருந்து எரிப்புக் குற்றவாளிகளும் இருந்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
மூவர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் இன்று மூவரையும் விடுவிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு அது சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து மூவரும் இன்று விடுதலையாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.