தமிழகம்

புயல் பாதித்த வீடுகளுக்கு 6.48 லட்சம் தார்பாலின் ஷீட்கள் ஒப்பந்தம் கோரியது நுகர்பொருள் வாணிபக் கழகம் 

செய்திப்பிரிவு

சென்னை

புயல் பாதித்த 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு வழங்க 6 லட்சத்து 48 ஆயிரம் தார்பாலின் ஷீட்களுக்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கோரியுள்ளது.

வங்கக்கடலில் கடந்த நவம்பர் 11-ம் தேதி உருவான கஜா புயல். 16-ம் தேதி அதிகாலை, அதி தீவிர புயலாக வலுப்பெற்று, நாகை மாவட்டம் அருகில் கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடக்கும் போது 115 கி.மீ.க்கும் அதிக மாக வீசிய காற்றால், வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள் சேத மடைந்தன. 3 லட்சத்துக்கும் அதிக மான வீடுகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட வீடுகளின் கூரைமேல் போட தார்பாலின் ஷீட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் சமீபத்தில் அறி வித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாதிக் கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்துள்ளன. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையில் இருந்து வீடுகளைப் பாதுகாக்க ஏதுவாக கூரை மேல் தற்காலிகமாக போடுவதற்கு தார்பாலின் ஷீட்கள் அளித்தால் உதவியாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

எனவே, கூரைகள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிகமாக கூரை அமைத்துக் கொள்ள தார்பாலின் ஷீட்களை முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் வாங்கி உடனடியாக வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 6 லட்சத்து 48 ஆயிரம் அதிக அடர்த்தி கொண்ட பாலிஎத்திலின் ஷீட்கள் வாங்குவதற்கு மதிப்பீடு கோரப்பட்டுள்ளது. குறிப்பாக, 130 மைக்ரான்கள் தடிமன் கொண்ட இந்த தார்பாலின் ஷீட்கள், தஞ்சை மாவட்டத்துக்கு 1 லட்சத்து 40 ஆயிரம், திருவாரூருக்கு 1 லட்சத்து 98 ஆயிரம், நாகை மாவட்டத்துக்கு 1 லட்சத்து 70 ஆயிரம், புதுக்கோட்டைக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் என பிரித்து அனுப்பப்பட உள்ளன.

SCROLL FOR NEXT