தமிழகம்

மகள் திருமண அழைப்பிதழை வைத்து  ராமேசுவரம் கோயிலில் முகேஷ் அம்பானி வழிபாடு

செய்திப்பிரிவு

ராமேஸ்வரம்

தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தனது மகளின் திருமண அழைப்பிதழை வைத்து ராமேஸ்வரம் ராம நாத சுவாமி கோயிலில் குடும்பத்தினருடன் நேற்று வழிபாடு நடத்தினார்.

நாட்டின் மிகப் பெரிய செல்வந்தரும், ரிலையன்ஸ் நிறுவன அதிபருமான முகேஷ் அம்பானி யின் மகள் இஷா அம்பானிக்கும் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவ னமான பிரமோல் நிறுவன அதிபரின் மகன் ஆனந்த் பிரமோலுக்கும் இத்தாலியில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், வருகிற டிச.12-ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் உள்ள பிரசித்திபெற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு நேரில் சென்று தனது மகளின் திருமண அழைப்பிதழை வைத்து அம்பானி குடும்பத்தினர் வழிபட்டு வருகின்றனர். முற்றிலும் தங்க இழைகளால் அலங்கரிக்கப் பட்ட ஒரு அழைப்பிதழின் செலவு மட்டும் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

இந்நிலையில், பிரசித்திபெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மகளின் திருமண அழைப்பிதழை வைத்து வழிபாடு நடத்துவதற்காக மதுரையில் இருந்து மண்டபத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வந்தார். அவருக்கு கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர் வரும் டிச.12-ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள மகள் திருமண விழா அழைப்பிதழை ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை நடத்தினார். தொடர்ந்து ராமநாத சுவாமி கோயிலின் இரண்டாம் பிரகாரத்தின் மராமத்துப் பணிகளுக்கான முழுச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக முகேஷ் அம்பானி ராமேஸ்வரம் கோயில் நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார்.

முன்னதாக தினமும் பகல் 1 மணிக்கு சாத்தப்படும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலின் நடை, முகேஷ் அம்பானியின் வருகைக்காக கூடுதலாக ஒரு மணி நேரம் திறந்து வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT