தமிழகம்

வெளிநாட்டு பட்டாசு இறக்குமதி அதிகாரத்தை எதிர்த்து வழக்கு: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டுக்குள் வெளிநாட்டில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணைச் செயலருக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கி இருந்தது. அந்த அதிகாரத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில், மத்திய அரசு உடனடியாக பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தமுருகன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

2010, மார்ச் 3-ம் தேதி மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டாசுகள் வரைமுறைப்படுத்தப்பட்ட பொருள்கள் என்றும், வெளிநாடுகளில் இருந்து அவற்றை இறக்குமதி செய்ய உரிமம் வழங்கப்படாது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவின்படி இறக்குமதி உரிமம் வழங்க வேண்டும் என்றால் மத்திய அமைச்சரவைதான் முடிவு செய்ய முடியும். ஏற்கெனவே மத்திய அரசு சீனாவிலிருந்து பட்டாசுகள் இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளது.

சிறப்பு அதிகாரம் ஏன்?

இந்த நிலையில், தரைவழியாக வெளிநாட்டு பட்டாசுகளை இறக்குமதி செய்ய உரிமம் வழங்கும் அதிகாரத்தை இணைச் செயலருக்கு வழங்கி கடந்த ஆண்டு ஜூன் 4-ல் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் வெளிநாட்டு பட்டாசுகளை இறக்குமதி செய்வதற்கு இணைச் செயலருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அபாயகரமான வெடி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்ற சட்ட விதியை மீறி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணைச் செயலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜெய்சந்திரன், மகாதேவன் ஆகியோர்கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு மத்திய அமைச்சரவை செயலர், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை செயலர், இணைச் செயலர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT