கஜா புயல் வேகத்தில் தமிழகத்தில் நிவாரணப் பணி செய்ய வேண்டும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் நிவாரணப் பணிகளைச் செய்து வருகின்றனர். இந்த நிலையில் டி . ராஜேந்தர் தனது மன்றம் சார்பில் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் டி.ராஜேந்தர் கூறுகையில், ''தன்னார்வ நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்து நல்ல தரமான பொருட்களை புயல் பாதித்த மக்களுக்கு அனுப்பி இருக்கிறோம். என் சொந்த ஊர் பேராவூரணி உட்பட பல டெல்டா ,மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தினருடன் இணைந்து எங்கள் மன்றத்தினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பான உதவிகளைச் செய்து வருகின்றனர். இந்த நிவாரணப் பணியில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். இது இயற்கையின் சீற்றம். புயல் இவ்வளவு வேகத்தில் வீசி விட்டது. அதே வேகத்தில் நிவாரணப் பணி செய்ய முடியுமா? நிச்சயம் அதே வேகத்தில் பண்ண வேண்டும். முயற்சியாவது செய்ய வேண்டும். தமிழக அரசு இன்னும் சிறப்பாக நிவாரணப் பணி செய்ய வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.