குடும்பப் பிரச்சினை காரணமாக 6 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தாய் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ராசிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கட்டநாச்சன்பட்டி வள்ளலார் கோயில் பின்புறத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி (35). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் செல்வி (25) என்பருடன் திருமணம் நடைபெற்றது. தம்பதியினருக்கு காமேஷ் (6) என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி அவ்வப்போது வேலைக்குச் செல்லாமல் சுற்றித் திரிவதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார். தவிர, வீட்டுச் செலவுக்கும் பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால், செல்வி வறுமையில் வாடி வந்துள்ளார். மகளின் நிலையைக் கண்டு வருந்திய தந்தை சங்கர் தனது வீட்டிற்கு, மகள் செல்வி,பேரன் காமேஷ் மற்றும் மருமகன் கிருஷ்ணமூர்த்தியையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
இச்சூழலில் கடந்த மாதம் 25-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கிருஷ்ணமூர்த்தி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது உள்ளிட்ட விவரம் எதுவும் தெரியவில்லை. இதுதொடர்பாக ராசிபுரம் காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்தார். எனினும், கணவன் மாயமானதால், எதிர்காலத்தை நினைத்து மனமுடைந்த நிலையில் செல்வி இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மகன் காமேஷைக் கயிற்றில் கட்டி தூக்கிட்டு கொலை செய்துவிட்டு, அதே கயிற்றில் செல்வியும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து ராசிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகனைக் கொலை செய்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராசிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.