தமிழகம்

வேளாண் அறிவியல் தமிழ் ஆராய்ச்சி தேசிய மாநாடு: சென்னையில் தொடங்கியது

செய்திப்பிரிவு

வேளாண் அறிவியல் தமிழ் ஆராய்ச்சி பற்றிய 2 நாள் தேசிய மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், வேளாண் அறிவியல் தமிழ் ஆராய்ச்சி இயக்கத்துடன் இணைந்து சென்னையில் 4-வது தேசிய வேளாண் அறிவியல் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலை வாணியஞ்சாவடியில் உள்ள மீன்வள பல்கலைக்கழக பட்ட மேற் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் பெலிக்ஸ் நேற்று தொடங்கிவைத்தார். மாநாட்டு மலரையும் ஆராய்ச்சி நூல்களையும் வெளியிட்ட அவர், சிறந்த கட்டுரையாளர்களுக்கு விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். மீன்வள பல்கலைக் கழகத்தில் அறிவியல் தமிழ்ப்பேரவை தொடங்கப்படும் என்றும் அறிவித்தார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் சி.பாலச்சந்திரன் சிறப்புரை யாற்றினார். பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் காரல் மார்க்ஸ், வேளாண் அறிவியல் தமிழ் இயக்கத்தின் நிறுவனர் எம்.முத்தமிழ்ச்செல்வன், பேராசிரியர் பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கால்நடை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். வேளாண்மை, கால்நடை, மீன்வளம் தொடர்பான 205 ஆய்வுக்கட்டுரைகள் இம்மாநாட்டில் சமர்ப்பிக்கப்படுகின்றன.

SCROLL FOR NEXT