திமுக கொள்கை பரப்புச் செயலாளரான மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மனைவி தேவிகா ராணி(49) சனிக்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு மரணமடைந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த தேவிகா, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவருக்கு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
திருச்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை வந்திருந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தேவிகா ராணியை சென்று பார்த்து சிவாவுக்கு ஆறுதல் கூறினார்.
பிறகு இரவு திருச்சியில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னைக்கு காரில் கிளம்பினார்.
சிறுகனூரைக் கடந்து பெரம்பலூர் சென்றபோது தேவிகா ராணி இறந்த செய்தி ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே திருச்சிக்கு திரும்பி வந்து தனியார் மருத்துவமனைக்குச் சென்று தேவிகா ராணிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சிவாவுக்கு ஆறுதல் கூறினார்.
இறுதி அஞ்சலி செலுத்த வராத திருச்சி திமுகவினர்
கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் துரைமுருகன், கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், கோ.சி.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் வந்து தேவிகா ராணிக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஆனால் உள்ளூரில் உள்ள திருச்சி மாநகர திமுக நிர்வாகிகளில் இரண்டு வட்டச் செயலர்கள், மாநகராட்சி உறுப்பினர்களில் 2 பேர், மாநகரச் செயலர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பெரியசாமி, சேகரன் ஆகியோரைத் தவிர வேறு எவரும் வரவில்லை.