தமிழகம்

போதையில் கார் ஓட்டிய காயத்ரி ரகுராமுக்கு அபராதம்

செய்திப்பிரிவு

போதையில் கார் ஓட்டிய நடிகை காயத்ரி ராகுராமுக்கு போலீஸார் அபராதம் விதித்தனர்.

சென்னை கோடம்பாக்கம் மகா லிங்கபுரத்தில் வசிப்பவர் நடிகை காயத்ரி ரகுராம். ‘சார்லி சாப்ளின்’, ‘விசில்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடன இயக்குநராகவும் உள்ளார். சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு ஒரு விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். காயத்ரி ஜெய ராமும் இதில் கலந்து கொண்டார்.

நேற்று அதிகாலை 1 மணி யளவில் அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி அருகே போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரை நிறுத்தியபோது, அதில் நடிகை காயத்ரி ரகுராம் இருப்பது தெரிந்தது. அவர் மதுபோதையில் காரை ஓட்டியது சோதனையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் காவலர் ஒருவர் காயத்ரியின் காரை ஓட்டி அவரை வீட்டில் பாதுகாப்பாக கொண்டுபோய் சேர்த்தார்.

SCROLL FOR NEXT