தமிழக கடற்கரைப் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழக்கத் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''நேற்று தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழக கடற்கரைப் பகுதியில் நிலவி வந்த வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுவிழந்து தமிழகத்தின் உள் பகுதியில் நிலவுகிறது.
இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சம் சோழவரம் மற்றும் மாதவரத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அடுத்து மரக்காணம் மீனம்பாக்கம் பண்ருட்டி பகுதிகளில் 9 செ.மீ. மழையும், தாமரைப்பாக்கம், நெய்வேலி பகுதிகளில் 8 செ.மீ. மழையும், தரமணி, பள்ளிப்பாளையம், செங்கல்பட்டு பகுதிகளில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்துவரும் 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் பரவலாகவும், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழையைப் பொறுத்தவரை விழுப்புரம், புதுவை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
சென்னையைப் பொறுத்தவரை இடைவெளிவிட்டு மிதமான மழை பெய்யும். சென்னையில் பதிவான மழையின் அளவு 31 செ.மீ. இந்தக் காலகட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட மழையின் அளவு 66 செ.மீ. இது 45 சதவீதம் குறைவு.
நேற்று முன்தினம்வரை 60 சதவீதமாக இருந்தது தற்போது 15 சதவீதம் குறைந்துள்ளது. இன்றும் மழை உள்ளது. இனிவரும் காலங்களிலும் மழை உண்டு''.
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.