தமிழகம்

ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்றுடன் பணி ஓய்வு : சிலைக்கடத்தல் வழக்குகளை இனிமேல் விசாரிக்கப்போவது யார்? - சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

ஐ.ஜி பொன் மாணிக்கவேல் இன்றுடன் பணி ஓய்வு பெறுவதையொட்டி, சிலைக்கடத்தல் வழக்குகளை இனிமேல் விசாரிக்கப் போவது யார் என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி-யாக இருக்கும் பொன்.மாணிக்கவேல் இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். காவல் துறையில் நேர்மையான அதிகாரி என்று பெயர் வாங்கிய இவர், கடந்த சில ஆண்டுகளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்ற பின்னர் அதிரடியாக செயல்பட்டு தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பழங்கால சிலைகளை மீட்டார்.

ஐஜி பொன் மாணிக்கவேல் 1958-ம் ஆண்டு பிறந்தார். 1989-ம் ஆண்டு குரூப் 1 அதிகாரியாக தேர்வு பெற்று, தமிழக காவல் துறையில் நேரடி டிஎஸ்பியாக சேர்ந்தார். பின்னர் 1996-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்குவதில் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெற்றார். சேலம் மாவட்ட எஸ்பி, உளவுப்பிரிவு டிஜஜி, சென்னை மத்திய குற்ற பிரிவு இணை ஆணையர், ரயில்வே மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி என தான் பணிபுரிந்த இடங்கள் அனைத்திலும் கண்டிப்பான அதிகாரி என்று பெயர் எடுத்தார்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையுடன் கோயில் சிலைகள் கொள்ளை போனதை கண்டு பிடித்து அதில் தொடர்புடையவர் மீதும் வழக்கு தொடர்ந்து நடவ டிக்கை எடுத்தார். தஞ்சை பெரிய கோயிலில் இருந்து திருடப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் உலகமா தேவி சிலைகளை குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்தும், நடராஜர் சிலைகளை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத் தில் இருந்தும் மீட்டு கொண்டு வந்தார். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் பல்வேறு தடைகளை கடந்து இவர் எடுத்த நடவடிக் கைகளை, வேறு எந்த அதிகாரியாலும் எடுக்க முடியாது என்ற நிலைக்கு பொன்.மாணிக்கவேலின் செயல்கள் இருந்தன.

இன்றுடன் பணியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு ஐஜி-யாக அடுத்து யார் வருவார், அவரும் இதேபோல நடவடிக்கை எடுத்து கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளை மீட்டுக் கொண்டு வருவாரா என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகிறது.

SCROLL FOR NEXT