அதிமுக எம்.எல்.ஏதோப்பு வெங்கடாச்சலத்தின் உதவியாளரின் இருசக்கர வாகனத்தை மர்ம மனிதர்கள் திருடிச் சென்றனர். அதை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆழ்வார்ப்பேட்டை சீதம்மாள் காலனியில் வசிப்பவர் செல்ல கிருஷ்ணன் (35), இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலத்தின் உதவியாளராக உள்ளார்.
நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 7-30 மணி அளவில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு மனைவி குழந்தைகளுடன் செல்லகிருஷ்ணன் தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.
கோவிலின் பின்புறம் குளக்கரை அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர் சுமார் 8 மணிக்கு திரும்பி வந்து வீட்டுக்கு போவதற்காக வாகனத்தை எடுக்க முயன்றபோது அவர் விட்ட இடத்தில் இருசக்கர வாகனம் இல்லை.
பல இடங்களிலும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை, கோவிலுக்கு போன நேரத்தைப்பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுப்பற்றி அவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் செல்லக்கிருஷ்ணன் புகார் அளித்தார்.
இதையடுத்து வாகனம் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.