தமிழகம்

இயல்புநிலைக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் டெல்டா மக்கள்: செல்லும் இடமெல்லாம் நிவாரண முகாம்கள்

வி.தேவதாசன்

எங்கு சென்றாலும் புயல் நிவாரண முகாம் கள்; சாலையோரத்தில் சமையல்; விழுந்து கிடக்கும் மரங்களைப் பார்த்தபடியே பொழுதைக் கழிக்கும் விவசாயிகள்; இடிந்து கிடக்கும் குடிசை வீடுகளை எப்படி சரிசெய்வது என்று தெரியாமல் தவிக்கும் ஏழைகள்.

வேதாரண்யம், தலைஞாயிறு, திருத் துறைப்பூண்டி, கோட்டூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை, மதுக்கூர், பட்டுக் கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு என கஜா புயல் பாதித்த டெல்டா மாவட் டங்களின் எந்த பகுதிக்கு சென்றாலும் இதே காட்சியாகவே உள்ளது.

பள்ளிக்கூடம், சமுதாயக் கூடம், திரு மண மண்டபம், வழிபாட்டுத் தலங்கள் எல்லாம் நிவாரண முகாம்களாக மாறியுள் ளன. பல இடங்களில் சாலையோரத்தி லேயே மக்கள் தங்கியுள்ளனர். அங்கேயே சமையலும் நடக்கிறது. யாரும் ருசி பார்த்து சாப்பிடுவதாக தெரியவில்லை. சாப்பிட்டாக வேண்டும் என்பதற்காக சாப்பிடுகின்றனர். ‘இங்கு புயல் நிவாரண முகாம் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய் யுங்கள்’ என்பது போன்ற வாசகங்கள் கொண்ட ஆயிரக்கணக்கான பதாகை களைப் பல இடங்களில் காணமுடிகிறது.

இப்பகுதிகளில் மா, தென்னை, முந்திரி, புளி, சவுக்கு, பலா, தேக்கு என நீண்டகால பலன் தரும் ஒரு கோடிக் கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து கிடக்கின் றன. குடிசை வீடுகள் சரிந்து கிடக்கின்றன. ஓட்டு வீடுகள் மேற்கூரையின்றி காணப் படுகின்றன. வணிக நிறுவனங்களும் இடிபாடுகளுக்கு தப்பவில்லை.

பெரும் பண்ணை விவசாயிகள், சிறு, குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வணிகர்கள் என அனை வருமே பாதிக்கப்பட்டு இருப்பதால் யார் பாதிப்பை யாரிடம் கூறி ஆறுதல் தேடு வது என தெரியாமல், ஒவ்வொருவரும் துக்கத்தை மனதுக்குள்ளேயே அடக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

விவசாயத் தொழிலாளர்கள், மீனவர் கள் பலருக்கு வீடு என்பதே இல்லாமல் போய்விட்டது. வீட்டில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள், பாத் திரங்கள், உடைகள் என எதுவும் இல்லை. இதனால், நிவாரணமாக கிடைக்கும் உணவுப் பொருட்களைக் குழுவாகவே சமைத்து சாப்பிடுகின்றனர்.

நெல் வயல்களுக்கும் பாதிப்புதான் என்றாலும், பிற பயிர்களை ஒப்பிடும் போது, நெல் சாகுபடிக்கு பெரிய பாதிப்பு இல்லை என்றுதான் கூறவேண்டும். நெல் வயல்களில் களையெடுப்பது, உரம் போடுவது, மருந்து தெளிப்பது என ஏராளமான பணிகள் உள்ளன. ஆனால் வயலுக்கு செல்லும் மனநிலையில் விவ சாயிகள் இல்லை; வேலை செய்வதற் கான மனபலம், உடல் பலத்தோடு தொழிலாளர்களும் இல்லை.

கீழத்தஞ்சையின் பல கிராமங்களில் உணவு நேரம் போக பெரும்பாலான நேரங்களில் சாலையோரம் மக்கள் வெறுமனே உட்கார்ந்திருக்கின்றனர்.

வெளியூர்களில் இருந்து நிவாரண பொருட்களை ஏற்றி வரும் தன்னார்வலர் களின் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு வந்து செல்கின்றன. இந்த நிவாரணப் பொருட்களை நீண்ட வரிசைகளில் நின்று மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

புயல் அடித்து 12 நாட்களுக்குப் பிறகும் இன்னும் நெடுஞ்சாலைகளில் இருந்து தொலைவில் இருக்கும் குக்கிராம மக் கள் பலருக்கு எவ்வித நிவாரண உதவி யும் சென்று சேராத நிலையும் காணப் படுகிறது. அரசின் நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, மின் விநியோக சீர மைப்பு பணிகள் துரிதமாக நடப்பதை பார்க்க முடிகிறது. வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் வந்திருக்கும் ஏராளமான தொழி லாளர்கள் ஓய்வின்றிப் பணியில் ஈடுபட் டுள்ளனர். எனினும், நகரப் பகுதிகளுக்கு மட்டுமே மின்சாரம் கிடைத்துள்ளது. பல கிராமங்களில் கடந்த 12 நாட்களாக இருள் சூழ்ந்த இரவாகவே உள்ளன.

முதல் 5 நாட்கள் குடிக்கக்கூட தண் ணீர் கிடைக்காததால் திரும்பிய திசை யெல்லாம் மக்கள் போராடிக் கொண்டி ருந்தனர். பின்னர், வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட குடிநீர் லாரிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி களை இயக்க வரவழைக்கப்பட்ட ஜென ரேட்டர்கள் ஆகியவற்றின் உதவியால் இப்போது பலருக்கு குடிநீர் கிடைத்து வருகிறது. எனினும் வெளியூர்களில் இருந்து தன்னார்வலர்கள் கொண்டு வரும் குடிநீர் பாட்டில்களை மட்டுமே நம்பியுள்ள குக்கிராமங்களும் இன்னும் பல இருக்கின்றன. பல நாட்கள் ஆகியும், புயல் சேதம் பற்றிய முறையான கணக்கெடுப்பு நடக்கவில்லை என்ற ஆதங்கம் எல்லாப் பகுதி மக்களிடமும் உள்ளது.

பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பல பள்ளிகளில் மாணவர்களே இல்லை. ஓட்டுக் கட்டிடங்களைக் கொண்ட பல பள்ளிகளில் கூரைகளே இல்லை. சுற்றுச்சுவர்கள் இடிந்து கிடக் கின்றன. பள்ளி கழிவறைகளில் தண்ணீர் இல்லை. குப்பைகளை முழுமையாக அகற்ற முடியவில்லை. அங்குதான் நிவா ரண முகாம்களும் செயல்படுகின்றன. ஆகவே, பெயரளவுக்கு பள்ளிகள் திறந்தி ருக்கிறதே தவிர, வகுப்புகள் நடப் பதில்லை. பேருந்துகள் இயங்கினாலும், பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. கடைகள் ஆங்காங்கே திறந்திருந்தாலும், மக்கள் வராததால் கடை வீதிகள் வெறிச்சோடி உள்ளன.

மொத்தத்தில் இயல்புநிலை திரும்ப இன்னும் 15 நாட்கள் ஆகலாம். ஒரு மாதம்கூட தேவைப்படலாம். அதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அந்த மக்களை யாரேனும் வெளியாட்கள் சந்தித்துக்கொண்டே இருப்பது மிகவும் அவசியமாக உள்ளது. அவர்கள் ஆட்சியாளர்களாக இருக்கலாம்; அரசியல்வாதிகளாக இருக்கலாம்; தன்னார்வலர்களாக இருக்கலாம். நடந்த சோகத்தை ஓரளவு மறந்து, அவர்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பும்வரை மற்றவர்களின் ஆறுதலும், ஆதரவும், உதவிகளும் தொடர்வது அவசியம். ஆம், மிகவும் அவசியம்!

SCROLL FOR NEXT