தமிழகம்

கஜா புயல்: ரூ.1 கோடி மதிப்பில் பாமக நிவாரண உதவி தொடக்கம்; ராமதாஸ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

'கஜா' புயல் பாதிப்புகளை சீர்செய்ய பாமக சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி வீசிய 'கஜா' புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டிருந்த தென்னை மரங்கள், பல்லாயிரக்கணக்கான ஏக்கரிலான வாழை மரங்கள் சேதமடைந்தன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்ததால் பல கிராமங்கள் இன்றும் இருளில் மூழ்கியுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிவாரணப் பணிகளுக்கு முதல்கட்டமாக மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து உடனடியாக 1,000 கோடி ரூபாயை தமிழக அரசு விடுவித்தது. தவிர, திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், திரையுலகினர் நிவாரண நிதி அறிவித்து வருகின்றனர். தங்கள் சார்பாக நிவாரணப் பொருட்களையும் அரசியல் கட்சிகள் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், பாமக சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்படும் பணி இன்று (வியாழக்கிழமை) தொடங்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பாமக சார்பில் ரூ.1 கோடி மதிப்புள்ள நிவாரண உதவிகளை 'கஜா' புயல் பாதித்த பகுதிகளில் வழங்கும் பணி இன்று தொடக்கம். காவிரி பாசன மாவட்டங்களில் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வழங்குகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் மனநிறைவு" என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT