பாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலச் சேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி பயன்படுத்தப்படாததால் கடந்த 5 ஆண்டுகளாக காட்சிப் பொருளாக உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பாலூர் ஊராட்சியில் மேலச்சேரி, கரும்பாக்கம், தேவனூர், பாலூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. மேலச்சேரியில் பாலாற்றுப் படுகை யில் இருந்து ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேற்கண்ட கிராமங் களுக்கு குடிநீர் விநியோகம் செய் யப்படுகிறது. மக்கள் தொகை அதிகரிப் பால் கூடுதல் குடிநீர் வழங்க, 2012-13-ம் ஆண்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
ஆனால், 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அது பயன்பாட்டுக்கு கொண்டுவராமல் கிடப்பில் போடப் பட்டுள்ளது. இதனால், நகரில் உள்ள பல தெருக்களுக்கு முழுமை யாக குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை.
தண்ணீருக்காக பொது மக்கள் தவிக்கும் நிலை உள்ளது. எனவே காட்சிப் பொருளாக உள்ள குடிநீர்த் தொட்டியை மக்கள் பயன் பாட்டுக்குக் கொண்டுவர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘எங்கள் கிராமத்தில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மக்களுக்குப் பயன்படாமல் கடந்த 5 ஆண்டுகளாகக் காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது. எனவே இதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’
இவ்வாறு அவர்கள் கூறினர்.