சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பி.புகழேந்தி நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய பி.புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று காலை புதிய நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் செயலாளர் கமலநாதன், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி உள்ளிட்ட பலர் பி.புகழேந்தியை வரவேற்றுப் பேசினர். தன்னை நீதிபதியாக பரிந்துரைத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், விழாவில் பங்கேற்றவர்களுக்கும் நீதிபதி பி.புகழேந்தி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் பி.எச். அரவிந்த் பாண்டியன், நர்மதா சம்பத், எஸ்.டி.எஸ்.மூர்த்தி, அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன், நீதிபதி புகழேந்தியின் குடும்பத்தினர் மற்றும் அவரது குடும்ப நண்பரான வைகோ, ராதாபுரம் அதிமுக எம்எல்ஏ-வும் வழக்கறிஞருமான இன்பதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பி.புகழேந்தி பதவியேற்றதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. 15 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.