தமிழகம்

‘கஜா’ புயல் - தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன

செய்திப்பிரிவு

‘கஜா’ புயலின் தாக்கத்தினால் பலத்த காற்று வீசியதில் மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், வேதாரண்யம், புதுக்கோட்டை, திருவாரூர், திண்டுக்கல், புதுச்சேரி. காரைக்கால் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

‘கஜா’ புயலின் பாதிப்பில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரண உதவித்தொகை அறிவித்துள்ளார்.

‘கஜா’ புயலின்போது 100 கி.மீ.வேகத்தில் அசுரக் காற்று வீசியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கடும் சேதாரம் ஏற்பட்டுள்ளதாகவும் பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

சேதாரம் குறித்த விவரங்கள் முழுமையாக இன்னும் பெறப்படாத நிலையில் ஆயிரக்கணக்கான மரங்களும் நூற்றுக்கணக்கான டிரான்ஸ்பார்மர்களும் செல்போன் கோபுரங்கள் சாய்ந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சாலைப் போக்குவரத்து, தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளன.

மரங்கள், படகுகள் சேதம்

சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் நகராட்சி, ஊராட்சி, மீட்புப் பணியாளர்களும் ஈடுபட்டுவரும் நிலையில் மக்களும் இப்பணிகளில் பங்கேற்று முறிந்துவிழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தரங்கம்பாடி கடலோர மீனவர்களின் 50க்கும் மேற்பட்ட படகுகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. பல்வேறு மாவட்டங்களிலும் வீட்டுச் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. மின்கம்பிகள் அறுந்து சாலைகளில் விழுந்துகிடக்கின்றன.

அதிக பாதிப்பு ஏற்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. புயலின் தாக்கம் பெருமளவில் ஏற்பட்டுள்ளநிலையில் நாகை மாவட்டத்தில்தான் அதிக அளவில் பெருத்த சேதாரம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

21 மின்கம்பங்கள் சாய்ந்தன

இதுவரை 21,000 மின்கம்பங்கள், 112 துணை மின்நிலையங்கள், 495 மின்கடத்திகள், 100 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளதாக  ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 60 ஆயிரம் மின்கம்பங்கள் மற்றும் தளவாடகங்கள் மின்வாரியத்தின் கையிருப்பில் உள்ளதால் உடனடியாக மின்துண்டிப்பு பணிகள் சீரமைக்கப்படும் எனவும் மின்துறை
தெரிவித்துள்ளது.

புயலின் தாக்கத்தில் ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியுள்ளது. காரைக்காலில் கப்பல் தரைதட்டியது. காரைக்காலில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கின்றன. இங்கு பெரும்பாலான மரங்கள் சாலையிலும் வீதிகளிலும் விழுந்துள்ளதால் மக்கள்வெளியே வரமுடியாதநிலையில் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

கஜா புயல் காரணமாக கடலூரில் கனமழை பெய்துவரும் நிலையில் தற்போது அங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் நீர் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து வரும்செய்திகள் தெரிவிக்கின்றன.

166 மருத்துவக் குழுக்கள்

புயல் தாக்கம் ஏற்பட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மருத்துவ சிகிச்சையளிக்க 166 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அரசு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆம்புலன்ஸ் மீட்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கால்நடைகளும் மீட்கப்பட்டு 256 இடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் திருச்சி, கடலூர் விருதாச்சலம் ஆகிய பகுதிகளில் மழையின் சீற்றம் இன்னும்கூட குறையவில்லை என்று கூறப்படுகிறது.

ரயில்கள் ரத்து

திருச்சி - காரைக்குடி, காரைக்குடி-விருதுநகர், திருச்சி- காரைக்குடி ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் - மும்பை ரயில் கொடை ரோடு ரயில்நிலையத்தில் 2 மணிநேரம் தாமதமாக நிறுத்திவைக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகளை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு மரங்கள் விழுந்துள்ளதால் மக்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளனர்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புயல் குறித்த அச்சம் தவிர்க்கும்விதமாக இரவும்பகலும் உரிய தகவல்களைப் பெற்று ஊடகங்கள்மூலமாக தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தவண்ணம் செயல்பட்டார்.

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மீனவர்கள் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

புயல் பாதித்த பகுதிகளுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். திருவாரூரில் அமைச்சர் காமராஜ் இருசக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்டார்.

புயல் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிடப்போவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்துள்ளார்

இந்நிலையில் இன்று மதியத்திற்குமேல் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT