தமிழகம்

மவுலிவாக்கம் 11 மாடி கட்டிட விபத்து: முதல்வரிடம் விசாரணை அறிக்கை தாக்கல்

செய்திப்பிரிவு

மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் நீதியரசர் ரெகுபதி திங்கள்கிழமை அளித்தார்.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டு வந்த 11 மாடி குடியிருப்பு கட்டிடம், கடந்த ஜூன் 28-ம் தேதி திடீரென இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி 61 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் ஒரு வாரம் நடந்தன.

இந்த விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. கட்டிட அனுமதி அளித்ததில் விதிமீறல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. சிபிஐ விசாரணை கோரி திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையே, கட்டிட விபத்துக்கான காரணம் குறித்து ஆராயவும், வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்த வழிமுறைகளை வகுக்கவும் நீதியரசர் சு.ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதையடுத்து சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த நீதியரசர் ரெகுபதி, கட்டுமான நிறுவனத்தினர் மற்றும் சிஎம்டிஏ உள்ளிட்ட அரசுத் துறைகளின் அதிகாரிகளிடமும், கட்டிட வல்லுநர்களிடமும் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை சந்தித்த நீதியரசர் ரெகுபதி, விசாரணை அறிக்கையை அளித்தார்.

பேரவையில் தாக்கல்

இதுகுறித்து ‘தி இந்து’விடம் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக 523 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நீதியரசர் ரெகுபதி தாக்கல் செய்துள்ளார். விபத்துக்கு காரணமானவர்கள் யார், இதுபோன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

முதல்வரிடம் அறிக்கை அளிக்கப்பட்டாலும் அதன் விவரங்கள் இப்போதைக்கு வெளியிடப்படாது. மத்திய விசாரணைக் கமிஷன் சட்டம் 1952-ன்படி, எந்தவொரு விசாரணைக் கமிஷனின் அறிக்கையும் அரசிடம் தரப்பட்ட 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவையில் வைத்து, ஒப்புதல் பெறவேண்டும். எனவே, அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, இந்த அறிக்கை பேரவையில் வைக்கப்படும் என தெரிகிறது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT