'கஜா' புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள 'கஜா' புயல் இன்று மாலை கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 'கஜா' புயல் தீவிரமடைந்துள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லவில்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் அந்தந்த மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
'கஜா' புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி பல்லைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் 'கஜா' புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துத் தயார் நிலையில் உள்ளது.
மோசமான வானிலை காரணமாகவும் ஓடுதளம் வெளிச்சம் இல்லாததாலும் புதுச்சேரிக்கு வர வேண்டிய பெங்களூரு, ஹைதராபாத் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.