டெல்டா மாவட்டங்களில் இன்றும், உள் மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
காவிரி டெல்டாவில் இன்று மாலை நல்ல மழை பெய்யும். பின்னர் உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும். டெல்டாவில் தொடங்கி மேற்கு நோக்கி நகர்ந்து மழை இருக்கும். தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். புதுச்சேரி முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோர பகுதிகளிலும் கனமழை தொடரும். இந்த மழை 30-ம் தேதி, டிசம்பர் 1-ம் தேதி வரை பெய்யும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டும் குறைவான மழே பெய்யும். நனைக்கும் அளவுக்கு அல்லது உயிர் கொடுக்கும் மழையாகவே இது இருக்கும். எனினும் மிகப்பெரிய அளவில் இந்த மழை இருக்காது.
டெல்டா மாவட்டங்களில் நாளை குறைவான மழை இருக்கும். அதேசமயம் உள் மாவட்டங்களில் நாளை அதிகமான மழை இருக்கும். டிசம்பர் மாதம் 4-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையின்போது வட மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். இருப்பினும் அடுத்த சில தினங்களுக்கு பிறகே இதனை முழுமையாக கணிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.