தமிழகம்

புயல், மழை, வெள்ளம், பேரிடர் நேரங்களில் உதவும் ‘TN SMART’APP : தேசியப் பேரிடர் மேலாண்மையின் கீழ் வழிகாட்டும் மொபைல் ஆப்

செய்திப்பிரிவு

புயல், மழை, வெள்ளம் போன்றவற்றின் நிலை, வானிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பொதுமக்கள் அறியும் வண்ணம் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் டிஎன் ஸ்மார்ட் எனும் செயலி உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.  

அரசின் தொலைநோக்குத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதன்படி வரும் வடகிழக்குப் பருவமழையின் போதே அபாயக் குறைப்புக்கான நடவடிக்கைகளை எடுக்கும் பணியை வருவாய்த் துறை தொடங்கியுள்ளது. அதே நேரம் பொதுமக்கள், சமூக எண்ணம் கொண்ட செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், பேரிடர் மேலாண்மை குறித்த ஆர்வம் உள்ளவர்கள் பேரிடர் காலத்தில் உரிய தகவலைப் பெறும் வண்ணம் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

மழையின் அளவு, வெள்ளம் தொடர்பாக ஒவ்வொரு பகுதிக்குமான முந்தைய தகவல்கள், நிகழ்கால தகவல்களைப் பெற்று கணித்து, தகவல்கள் அனுப்பும் வகையில் டிஎன்-ஸ்மார்ட் எனும் புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. “பாங்காக்கில் செயல்படும் ஆர்ஐஎம்இஎஸ் உதவியுடன் இந்த டிஎன்-ஸ்மார்ட் செயல்படும். இதன் மூலம் அந்தந்த நேரத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களையும், அதன் பாதிப்புகளையும் கணிக்க முடியும். இந்த மென்பொருள், தகவல்களை உடனுக்குடன் வழங்கி எச்சரிக்கை விடுக்கும்.

சாதாரணமாக அனைவரும் புழக்கத்தில் வைத்துள்ள ஆண்ட்ராய்டு செல்போனில் கூகுள் ப்ளேஸ்டோரில் இந்த ஆப் உள்ளது. பிளே ஸ்டோரில் #TNSMART என டைப் செய்தால் அந்தச் செயலி டவுன்லோடு ஆகும். பின்னர் அந்தச் செயலியில் உங்கள் பெயர், செல்போன் எண், இமெயில் முதலியவற்றை பதிவு செய்து உங்கள் பாஸ்வேர்டையும் பதிவு செய்தால் செயலி செயல்ப்டத் தொடங்கும்.

வானிலை குறித்த தவறான தகவல்களைப் பொதுமக்களை அச்சப்படுத்தும் வகையில் பலரும் வாட்ஸ் அப் வலைதளங்களில் பரப்பும் நேரத்தில், தெளிவாக உண்மைத் தகவலை நமது பாக்கெட்டில் உள்ள செல்போனிலேயே அறிந்துகொள்ள இந்தச் செயலி உதவுகிறது.

SCROLL FOR NEXT