சென்னையில் விரிவாக்கம் செய்யப்படுவதாக ஏற்கெனவே கூறப்பட்ட 14 சாலைகள் மட்டுமின்றி சூளைமேடு நெடுஞ்சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை உள்ளிட்ட 7 சாலைகளும் விரிவாக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் 14 சாலைகள் விரிவாக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டி ருந்தது. முதல்கட்டமாக, நில எடுப்பு அட்டவணை தயாரிப்பு பணியை தனியார் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதில் பேப்பர் மில்ஸ் சாலை, செம்பியம் ரெட் ஹில்ஸ் சாலையில் பணிகள் மேற்கொள்ள பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 சாலை பணிகளுக்கு ஒப்பம் கோரப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி, சூளைமேடு நெடுஞ்சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் நடேசன் சாலை, ராமகிருஷ்ண மடம் சாலை, வேளச்சேரி பிரதான சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, அல்லிக்குளம் இணைப்பு சாலை ஆகிய சாலைகளும் விரிவாக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மேயர் கூறினார்.