சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள், இடதுசாரிகள் சபரிமலைக்கு செல்வதை ஏற்க முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர் களிடம் தமிழிசை நேற்று கூறியதாவது:
ஒவ்வொரு கோயிலுக்கும் அதற்கென தனி சம்பிரதாயம் உள்ளது. அதை அனைவரும் மதிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை காரணம்காட்டி, எப்படியேனும் சபரிமலையில் அனைத்து வயது பெண் களையும் அனுமதித்துவிட வேண்டும்; அந்த கோயிலின் சம்பிரதாயங்களை தகர்த்தெறிய வேண்டும் என்பதில் கேரள கம்யூனிஸ்ட் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
சபரிமலை சம்பிரதாயத்தை காப்பதற் காக போராடிவரும் பக்தர்கள் மீது கேரள காவல் துறை தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்துக்குரியது.
சுவாமி ஐயப்பன் மீது பக்தி கொண்ட உண்மையான பெண் பக்தர்கள் யாரும் சபரி மலைக்கு செல்ல மாட்டார்கள். ஆனால் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், பெண்ணிய வாதிகள் என்ற பெயரில் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களும், இடதுசாரிகளும், பிற மதத்தினரும் சபரிமலை செல்ல முயற்சிப்பதை ஏற்க முடியாது. சபரிமலை என்பது உணர்வு பூர்வமான, மதம் சார்ந்த இடமாகும். மற்ற மதத்தினர் சென்றால் பிரச்சினை அதிகரிக்குமே தவிர, எவ்விதத்திலும் தீர்வு கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.