தமிழகம்

முன்னோடி நாடக ஆளுமை ந.முத்துசாமி காலமானார்

செய்திப்பிரிவு

தமிழின் சிறந்த சிறுகதையாளர்களில் ஒருவரும், முன்னோடி நாடக ஆளுமையுமான ந.முத்துசாமி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 83.

தஞ்சை மாவட்டம் புஞ்சை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ந.முத்துசாமி. சென்னையில் கூத்துப்பட்டறையை நிறுவி நாடகக் கலைஞர்களையும், சினிமா நடிகர்களையும் உருவாக்கியவர். விஜய் சேதுபதி, விமல், விதார்த், தினேஷ் உள்ளிட்ட பலரும் ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்த்துக் கலையாக விளங்கி வரும் தெருக்கூத்தை தமிழ்க்கலையின் அழிக்க முடியாத அடையாளமாக்கியதில் ந.முத்துசாமிக்குப் பெரும் பங்குண்டு. இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘நீர்மை’ நூலே தமிழ்ச் சிறுகதைத் துறையின் முக்கியமான சாதனையாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ந.முத்துசாமியின் படைப்புகளில் முக்கியமானது அவரின் அரை நூற்றாண்டு நாடக ஆக்கங்கள் ந.முத்துசாமி நாடகங்கள் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. 21 நாடகங்களைக் கொண்டு, ஆயிரம் பக்கங்களுக்கு மேல் கொண்ட பெருந்தொகுப்பு இது.

2012 ஆம் ஆண்டில் இவரது கலைச்சேவையை பாராட்டும் வண்ணம் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமைப்படுத்தியது.

நாடகத் துறையில் ந.முத்துசாமி அடியெடுத்துவைத்ததன் 50-வது ஆண்டு இது. சிறுகதை எழுதுவதை விட்டுவிட்டு, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை நாடகத்துக்காகவும் கூத்து தொடர்பான ஆய்வுகளுக்காகவும் அர்ப்பணித்த ந.முத்துசாமி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT