சேலத்தில் மது போதையில் காவல் ஆய்வாளரை கத்தியால் குத்திய வாலிபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாநகர ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவு ஆய்வாளர் சொரிமுத்து, நெல்லை மாவட்டம் திசையன் விளை பகுதியை சேர்ந்தவர். சென்னையில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த இவர், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு காவல் ஆய்வாளராக பதவி உயர்வுபெற்று சேலத்துக்கு மாற்றலாகி வந்தார்.
நேற்று முன் தினம் இரவு வேலை முடிந்து போலீஸ் ஜீப்பில் அஸ்தம்பட்டியில் உள்ள தனது அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
காந்தி ரோடு பகுதியில் ஜீப்பை நிறுத்திவிட்டு, அங்குள்ள டிபன் கடைக்கு சாப்பிடச் சென்றார்.
அப்போது அந்த வழியே பால்காரர் ஒருவர் மொபட்டில் வேகமாக வந்து சொரிமுத்து மீது மோதினார். இதில் இருவரும் கீழே விழுந்துவிட்டனர். பால் காரரை தூக்கி விட்டுவிட்டு, ஏன் வேகமாக வண்டியை ஓட்டுகிறீர்கள் என சொரிமுத்து கேட்டார்.
அப்போது அங்கு சேலம் அஸ்தம்பட்டி பிள்ளையார் நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் மது போதை யில் தள்ளாடியடி வந்தார்.
பால்காரரிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள் என சொரிமுத்துவிடம் கேட்ட ரவிச்சந்திரன், திடீரென ஆத்திரம் அடைந்து தனது சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த சேவிங் செய்யும் கத்தியால் சொரிமுத்துவின் கழுத்து, காது பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.
தப்பி ஓட முயன்ற ரவிச் சந்திரனை பிடித்து, அஸ்தம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார் சொரிமுத்து. போலீஸார் ரவிச்சந்திரனை கைது செய்து, அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
படுகாயம் அடைந்த சொரி முத்து சேலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.