தமிழகம்

சின்னமனூர் அருகே 10 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை: 3 இளைஞர்களுக்கு தூக்கு  

இரா.கோசிமின்

சின்னமனூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞர்கள் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் 10 வயது சிறுமி.  அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு டிச.1-ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி விளையாடச்சென்றார். சிறுமி ஐயப்பன் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்திருந்தார். விளையாடச்சென்ற சிறுமி காணாமல் போனார். அவரை உறவினர்கள் அவரை அப்பகுதி முழுதும் தேடினர்.   

அப்போது அவரது வீட்டுக்கு அருகே இருந்த தோட்டத்தின் கிணற்றில் சிறுமி பிணமாக மிதந்தது தெரியவந்தது. சிறுமியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய ஓடைப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

விசாரணையில் காமாட்சிபுரம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த சுந்தர்ராஜ் (25), ராபின் (எ) ரவி (23), குமரேசன் (19) ஆகிய 3 பேரும் சேர்ந்து  பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. ஆனால் அவர்களும் சேர்ந்தே சிறுமியை தேடுவது போல நடித்துள்ளனர். பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு தேனி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பளிக்கப்பட்டது.  நீதிபதி திலகம் சிறுமியை கொலை செய்த குற்றத்திற்காக சுந்தர்ராஜ், ராபின் (எ) ரவி, குமரேசன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT