தமிழகம்

பொறியியல் கல்வியை மேம்படுத்த புதிய திட்டம்: தமிழகத்தில் 13 கல்லூரிகள் பயன்பெறும் - சென்னை ஐஐடி இயக்குநர் தகவல்

செய்திப்பிரிவு

பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்த சிஐஐ அமைப்புடன் இணைந்து புதிய திட்டம் செயல்படுத் தப்பட இருப்பதாக சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறினார்.

நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த புதிய திட்டத்தை செயல் படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்தது. இதற்காக ஐஐடி பேராசிரியர்கள், தொழில் துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. அந்த குழுவைக் கொண்டு பொறியியல் கல்வித் தர மேம்பாட்டு திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் உதவியுடன் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டது.

இந்த புதிய திட்டம் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு சென்னை, டெல்லி, கான்பூர் ஐஐடிக்களின் மூத்த பேராசிரியர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் குறிப்பிட்ட பாடம் குறித்து உரையாற்றுவார்கள். அவர்களுடன் 3-ம் ஆண்டு, இறுதி ஆண்டு மாணவர்கள் கலந்துரையாடி சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்.

முதல்கட்டமாக இத்திட்டம் நாடு முழுவதும் 125 பொறியியல் கல்லூரிகளில் 45 ஆயிரம் மாணவர்களுக்கு செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 13 கல்லூரிகளின் மாணவர்கள் பயன்பெறுவர். இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) உதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டம் பின்னர் படிப்படியாக மேலும் பல கல்லூரிகளுக்கு விரிவுபடுத்தப்படும். தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப, வேலைவாய்ப்புத் திறன் மிக்க மாணவர்களை உருவாக்க இது உதவியாக இருக்கும் என்று பாஸ்கர் ராமமூர்த்தி கூறினார்.

பொறியியல் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் தலைவர் பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா கூறும்போது, ‘‘நம் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 17 லட்சம் மாணவர்கள் பொறியியல் படித்துவிட்டு வெளியே வருகின்றனர். தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி அவர்களை வேலைக்கு உகந்தவர்களாக மாற்றும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், பொறியியல் பாடங்களுடன் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, ‘பைதான்’ சிறப்பு கணினி மொழிப் பயிற்சி போன்ற பயிற்சிகளும் இடம்பெறும்’’ என்றார்.

சிஐஐ முன்னாள் தலைவர் பி.சந்தானம் கூறும்போது, ‘‘கல்லூரிகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியைக் குறைத்து மாணவர்களுக்கு செயல்பாட்டுப் பயிற்சி அளிக்க இந்த புதிய திட்டம் உதவும்’’ என்றார்.

SCROLL FOR NEXT