கச்சத்தீவில் வெள்ளைக் கொடியுடன் தஞ்சமடையும் போராட்டத்தை ராமேசுவரம் மீனவர்கள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதிமொழியை ஏற்று கைவிட்டனர்.
இலங்கை சிறைகளில் உள்ள 94 மீனவர்களையும், 62 விசைப்படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்களுக்கு உறுதிபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ராமேசுவரம் வேர்க்கோடு தேவாலயத்திலிருந்து மீனவர் சங்கத் தலைவர்கள் போஸ், தேவதாஸ், சேசு, எமரிட், சுவாமி பிரணவநந்தா, பங்கு தந்தை சகாயராஜ் ஆகியோர் தலைமையில் கச்சத்தீவில் வெள்ளைக் கொடியுடன் குடும்பத்தோடு தஞ்சமடையும் போராட்டத்தை ஊர்வலமாக சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் துவங்கினர்.
கச்சதீவுக்குள் அத்துமீறி நுழைந்தால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் ருவன் வணிகசூரிய எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் பாதுகாப்புக்காக ராமேசுவரத்தில் திரளான காவல்துறையினர் சனிக்கிழமை அதிகாலையிலேயே ஏ.டி.எஸ்.பி. வெள்ளைத்துரை தலைமையில் குவிக்கப்பட்டிருந்தனர்.
மீனவர்களின் ஊர்வலம் கிளம்பிய சிறிது நேரத்தில், கச்சத் தீவுக்கு தஞ்சம் புகும் போராட்டத்துக்கு அனுமதி கிடையாது. மேலும் தடையை மீறி செல்பவர்கள் கைது செய்யப்படுவர் என காவல்துறையினர் எச்சரித்தனர்.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் , இலங்கை சிறையில் வாடும் மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
மேலும் மீனவர் பிரச்சினைகள் குறித்து ராமேசுவரத்தில் இருந்து மீனவர் பிரதிநிதிகள் குழு டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை மற்றும் அதிகாரிகளுடன் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.
அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதிமொழியை ஏற்று மீனவர் சங்க பிரதிநிதிகள் கச்சத்தீவுக்கு தஞ்சம்புகும் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய மீனவர்கள், தங்கள் விசைப்படகுகளின் பதிவுப் புத்தகங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தினர். அப்போது மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் மீனவர்கள் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளிடம் தெரிவிப்பதாக அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் மீனவர்கள் பதிவுப் புத்தகங்களை திரும்ப கொண்டது குறிப்பிடத்தக்கது.