ஜமாத்தின் வரவு- செலவு கணக்குகளை கேட்டதற்காக ஊரை விட்டு விலக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டத்தில் உள்ளது முஸ்லிம் நகர். இந்நகரில் இரு நூறு ஆண்டுகளாக 486 முஸ்லிம் குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர். இங்கு ஜமாத் செயல்பட்டு வருகிறது. இதன் பொறுப்பாளராக கடந்த 14 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஷரீப் வரவு- செலவு- கணக்குகளை ஜமாத்தில் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்ட
தற்காக 128 குடும்பங்கள் கடந்த 3 மாதங்களாக ஊர் விலக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 225 பேர் உணவுப் பொருட்கள், பால், குடிநீர் உள்ளிட்டவைகளுக்காக 5 கி.மீ., தூரத்தில் உள்ள திருத்தணி செல்ல வேண்டியதுள்ளது. அதுமட்டு
மல்லாமல், ஊர் விலக்கம் செய்தவர்களிடம் பேசும் சக முஸ்லீம் மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாதிப்புக்குள்ளானவர்கள் திங்கள் கிழமை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டனர். தாங்கள் ஊர் விலக்கம் செய்ய காரணமான ஷரீப், நவாப், மாபுப் ஷெரீப் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தாங்கள் ஊரில் அமைதியாக வாழ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரி மற்றும் திருவள்ளூர் நகர போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தினர்.
இந்த விவகாரத்தில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது உறுதியளிக்கப்பட்டது. இதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.