தமிழகம்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஆக. 31-ம் தேதி விசாரணை  - உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

எம்எல்ஏக்கள் தகுதி நீ்க்கம் தொடர்பான வழக்கு விசாரணை வரும் 31-ம் தேதிக்கு தள்ளி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினகரன் ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 18 எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்  ஆஜராகி, ‘‘அரசுக்கு எதிராக 18 எம்எல்ஏக்களும் செயல்பட்டதாக மற்றொரு எம்எல்ஏவான ஜக்கையன் அளித்ததாக கூறப்படும் புகார் தொடர்பான ஆவணங்களைத் தங்களுக்கு பேரவைத் தலைவர் அளிக்கவில்லை.

18 எம்எல்ஏக்களும் ஆட்சிக்கு எதிராக எந்த இடத்திலும் கருத்து தெரிவிக்கவில்லை. முதல்வரை மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. உள்கட்சி விவகாரம் எனும்போது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமேயன்றி தகுதி நீக்கம் செய்ய முடியாது’’ என வாதிட்டார்.

இதற்கு பதிலளித்து பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம், ‘‘உட்கட்சி பிரச்சினைகளை  மூன்றாவது நபரிடம் எடுத்துச் செல்லக்கூடாது. ஒருவேளை ஆளுநர் இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் முடிவுகள் விபரீதமாகியிருக்கும். இதிலிருந்தே  18 பேரும் கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக செயல்பட்டுள்ளனர். முதல்வரை மாற்றும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது’’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.சத்தியநாராயணன், வழக்கு விசாரணையை வரும் 31-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம் மட்டும் வாதிட நீதிபதி அனுமதி அளித்தார். அன்றுடன் வாதங்கள் நிறைவுபெற உள்ளது என நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கின்  ஒவ்வொரு விசாரணையையும் திமுக வழக்கறிஞர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT