தமிழகம்

திமுக ஆட்சியை கலைக்க ஒப்புக்கொள்ளாமல் ஆட்சியை இழந்தவர் வாஜ்பாய்: ஸ்டாலின் அஞ்சலி

செய்திப்பிரிவு

திமுக ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் என்று ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்ட போது, தன்னுடைய ஆட்சிக்கு ஏற்பட்டிருந்த ஆபத்தை பற்றிக்கூட கவலைப்படாமல் அரசியல் சட்டத்தை பேணிப் பாதுகாத்தவர் வாஜ்பாய் என ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், டெல்லியில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதேபோல், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் தி.மு.க சார்பில் கலந்துகொள்ள உள்ளனர்.

அஞ்சலி செலுத்திய பின்னர், ஸ்டாலின் டெல்லியில் செய்தியாளர்களிடத்தில் பேட்டி அளித்தார்:

“முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலிவுற்றிருந்த நிலையில் இன்று (16-08-2018) அவர் காலமாகியிருக்கிறார். அவருடைய மறைவென்பது இந்திய தேசத்திற்கே ஒரு மாபெரும் இழப்பாக அமைந்திருக்கிறது.

ஒரு மாபெரும் தலைவராக, குறிப்பாக இந்திய நாட்டினுடைய பிரதமராக பொறுப்பேற்றிருந்த காலகட்டத்தில் உலகளவில் பாராட்டப்படக்கூடிய அளவிற்கு அவர் தன்னுடைய கடமைகளை, பணிகளை ஆற்றியிருக்கிறார்.

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில், “தங்க நாற்கர சாலை” என்ற ஒரு மாபெரும் திட்டம் இந்தியா முழுவதும் அவருடைய காலக்கட்டத்திலே நிறைவேற்றப்பட்டு, அது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய சாதனையாக அமைந்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, தமிழகத்திலே தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், மத்தியிலே வாஜ்பாய் தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, திமுக ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் என்று ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்ட போது, தன்னுடைய ஆட்சிக்கு ஏற்பட்டிருந்த ஆபத்தை பற்றிக்கூட கவலைப்படாமல் அரசியல் சட்டத்தை பேணிப்பாதுகாத்து, அதற்கு ஒப்புதல் தராத நிலையில், தன்னுடைய கடமையை அவர் நிறைவேற்றியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, தலைவர் கருணாநிதியோடு நெருங்கிய நட்பு கொண்டு, ஒரு நெருங்கிய நண்பராக விளங்கியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் தலைவருடைய இழப்பு என்பது நமக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய வருத்தத்தை இன்றைக்கு தந்து கொண்டிருக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், குறிப்பாக அந்த இயக்கத்தைச் சார்ந்திருக்கக் கூடியவர்களுக்கும் திமுக சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT