எபோலா வைரஸ் தாக்கியதாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு எபோலா வைரஸ் தாக்கவில்லை என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
கினியாவிலிருந்து சென்னை வந்திறங்கிய தேனியைச் சேர்ந்த 25 வயது நபருக்கு எபோலா என்ற கொடிய வைரஸ் தாக்கியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரை எபோலா வைரஸ் தாக்கவில்லை என்று இன்று மதியம் மருத்துவமனையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட இந்த நபர் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
இது குறித்து டாக்டர் ரகுநந்தன் கூறுகையில், “ரத்தப் பரிசோதனையில் எபோலா வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. அவர் தனது சொந்த ஊரான தேனிக்குச் செல்ல விரும்பினார். அங்கு அவரது தந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறினார். எனவே அவரை 108 ஆம்புலன்ஸில் ஏற்று தேனிக்கு அனுப்பி வைத்தோம். ஆனாலும் அங்கு அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.
மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் எபோலா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் பரவியுள்ளதை அடுத்து அங்கிருந்து வரும் பயணிகளைப் பரிசோதனை செய்ய விமான நிலையத்தில் மருத்துவ ஆலோசகர்கள் உள்ளிட்ட குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.