ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. புதிதாக நியமிக்கப்படும் 14,700 ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுசெய்யப்பட்டு தேர்வுபட்டியலில் இடம்பெற்றுள்ள 14,700 ஆசிரியர்களுக்கும் பணிநியமன கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது. அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள், அரசு மற்றும் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட உள்ளன. கலந்தாய்வு நாள் விவரம் ஆசிரியர் பிரிவு வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்கு) - சனிக்கிழமை (இன்று)
2. முதுகலை ஆசிரியர்கள் (வேறு மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்கு) - ஞாயிற்றுக் கிழமை
3. இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்தில் உள்ள காலி
யிடங்கள்) - செப்டம்பர் 1-ம் தேதி
4. இடைநிலை ஆசிரியர்கள் (வேறு மாவட்டத்தில் உள்ள காலி
யிடங்கள்) - செப்டம்பர் 2-ந்தேதி
5. பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்
டத்தில் உள்ள காலியிடங்கள்) - செப்டம்பர் 3ம் தேதி
6. பட்டதாரி ஆசிரியர்கள் (வேறு மாவட்டத்தில் உள்ள காலியிடங்கள்) - செப்டம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகள்
ஒரு வாரத்திற்குள்...
ஆசிரியர்களின் இருப்பிட முகவரி அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட மையத்தில் (கலந்தாய்வு மையங்கள் மாவட்ட வாரியாக தனி அட்டவணையில் தரப்பட்டுள்ளது) கலந்தாய்வு காலை 9 மணி முதல் நடைபெறும்.
கலந்தாய்வுக்கு வரும்போது, கல்விச்சான்றிதழ்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக்கடிதம் ஆகியவற்றைக் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும். கலந்தாய்வு மூலமாக பணிநியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.