தென்மேற்குப் பருவமழை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் திங்கள்கிழமை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் திங்கள்கிழமை கனமழை பெய்யும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய் யும். சென்னையில் வானம் மேகமூட்டத் துடன் காணப்படும். சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பல்லா வரம், குரோம்பேட்டை வேளச்சேரி ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால், விடுமுறை நாள் என்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அவ்வளவாகப் பாதிக்கப்படவில்லை.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகல்லாரில் 120 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வால்பாறை 40 மில்லி மீட்டரும், தேனி மாவட்டம் பெரியார், பொள்ளாச்சி, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், ஜி.பஜார் ஆகிய இடங்களில் தலா 10 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.